தமிழ்நாடு, உலகின் பழம்பெருமைகள்கொண்ட நாடு

Loading

இந்திய நாட்டிய விழா 2025 – 2026

 (21.12.2025)அன்று மாண்புமிகு குறு சிறு   மற்றும் நடுதரத் தொழில் நிறுவனங்கள் துறை  அமைச்சர்  திரு.தா.மோ. அன்பரசன் அவர்கள்,   மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்தரன்  அவர்கள்  இணைந்து மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழாவினை தொடங்கி வைத்தனர்.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  நல்வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சுற்றுலா துறை மாபெரும் வளர்ச்சிப்பெற்றுள்ளது.  தமிழ்நாடு, உலகின் பழம்பெருமைகள் கொண்ட கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் கீழடி போன்ற வரலாற்ற சிறப்புகளின்  தாயகமாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் தொல்லியல் துறையால் அங்கரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னங்கள்  மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், ரதங்கள்  மற்றும் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், நீலகிரி பாரம்பரிய மலை ரயில், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை, செஞ்சி  கோட்டை ஆகியவற்றை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது.

சர்வதேச சுற்றுலாத் தலமாக வளர்ச்சிப் பெற்றுள்ள மாமல்லபுரம், 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர் கால முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். மாமன்னன் மகேந்திர வர்மபல்லவன் படைத்தளித்த மாமல்லபுரம் கலைச்செல்வங்கள் பலநூறு ஆண்டுகள் கடந்தும், உயிர்ப்புடன் அழகு மிளிர மணற் பரப்பில் எழுந்து நிற்கும் வரலாற்று மகத்துவமாகும். மாமல்லபுரம் கட்டிடக் கலையின் அருங்காட்சியகமாக திகழ்கிறது. இங்குவங்கக் கடலோரத்தில் ஒரு கற்கோயில், திறந்தவெளிச் சிற்பம், குடை வரைக்கோயில், ஒற்றைக் கல் சிற்பங்கள் ஒரே இடத்தில் காணகிடைக்கும் அற்புதமாகும். இதன் காரணமாக இந்தியாவில் அதிகளவில் வெளிநாட்டு பயணிகள் வருகைதரும் இடமாக மாமல்லபுரம் விளங்கிவருகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகையினை அதிகரிக்கவும், அவர்கள் தமிழ்நாட்டில் நீண்ட நாட்கள் தங்கி சுற்றுலாதலங்களை பார்வையிடவும் தமிழநாட்டின் கலைகளின் தொன்மையை  உணர்த்தும் வகையில்  கடல் அருகிலேயே  கலைநயம் கொண்ட சிற்பச் சூழலில்  தமிழ்நாடு அரசால் மாமல்லபுரம் நாட்டிய விழா 1992ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு இந்திய நாட்டிய விழாவாக 2009 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு(2025) இந்திய நாட்டிய விழா மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் 21.12.2025 முதல்  19.01.2026 வரை நடைபெறஉள்ளது.

இந்திய நாட்டிய விழாவில் இந்திய நாட்டியங்களில் சிறப்பான பரதநாட்டியம், மோகினியாட்டம், கூடியாட்டம், ஒடிசி, கதக்களி, குச்சிப்புடி மற்றும் கிராமிய கலைகளான கரகம், காவடி, தப்பாட்டம், ஒயிலாட்டம், போன்ற 150 க்கும் மேற்பட்ட குழுக்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிய விழாவினை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருகைதந்து கண்டுகளித்து  பயன்பெறும் வகையில் இந்திய நாட்டிய திருவிழா திகழ்கிறது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம் அவர்கள்,சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப.,அவர்கள், செங்கல்பட்டு சார் ஆட்சியர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., அவர்கள், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் திரு. கோ.காமராஜ் அவர்கள், மாமல்லபுரம் நகர மன்ற தலைவர் திருமதி .வளர்மதி யஷ்வந்த் ராவ் அவர்கள்,  சுற்றுலாத்துறை இணை இயக்குனர் திருமதி அ.சிவப்பிரியா அவர்கள்,  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர்  திருமதி சி.லட்சுமி பிரியா அவர்கள், மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- மக்கள் தொடர்பு அலுவலர்,   தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

0Shares