ஈரோடு தாளவாடி தொட்டபுரத்தில் 46அடி ஆஞ்சநேயர்
![]()
ஈரோடு தாளவாடி
ஈரோடு தாளவாடி தொட்டபுரத்தில் அனுமன் ஜெயந்தி விழா: 46 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை தொட்டபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் மிக விமரிசையாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கோமாதா பூஜை நடைபெற்று, யாக வேள்வி பூஜை செய்து, ராமர் பாதம் அமைக்கும் விழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவிலில் வீற்றிருக்கும் 46 அடி உயரமுள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு விழாவையொட்டி அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு உகந்த துளசி மாலைகள் மற்றும் பல ஆயிரம் வடைகளால் தொடுக்கப்பட்ட வடை மாலை சாத்தப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வாக பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு முழுமையாக வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அவர் பக்தர்களுக்குப் பேரருள் பாலித்தார். இந்தக் கோவிலானது தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லையோரம் அமைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன.

