திருவள்ளூர் மாவட்டத்தில் தொகுதி வாக்காளர் பட்டியல்
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெளியிட்டார் :
திருவள்ளூர் டிச 21 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புதிய பல்நோக்கு கூட்டரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் என மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டு பேசினார்.
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.26 தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணி கடந்த கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3699 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் தற்போது வாக்குச்சாவடி மறுசீரமைப்புக்கு பின் 306 வாக்குச்சாவடிகள் அதிகரித்து 4005 வாக்குச்சாவடிகள் தற்போது உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி கடந்த 27.10.25 தேதியில் மொத்தம் 35 லட்சத்து 82 ஆயிரத்து 226 வாக்காளர்கள் இருந்தனர். இந்நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பின் வாக்காளர் பட்டியலில் உள்ளபடி வசிக்காதவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள், இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு கொண்டவர்கள் என 6 லட்சத்து 19 ஆயிரத்து 777 பேர் உள்ளதாக தெரிவித்தார். அதன்படி தற்போது ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 53 ஆயிரத்து 543 பேரும், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 8 ஆயிரத்து 306 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 600 பேர் என மொத்தம் 29 லட்சத்து 62 ஆயிரத்து 449 வாக்காளர்கள் மட்டும் தற்போது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் 1.1.2026 ஆம் தேதி அன்று 18 வயதை பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டி யலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம்,திருத்தம் செய்ய படிவம் 8-ஐயும்,பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7-ஐயும் இன்று முதல் வருகிற ஜனவரி மாதம் 18 ஆம் தேதி வரை வாக்காளர் பதிவு அலுவலரிடத்திலோ, உதவி வாக்காளர் பதிவு அலுவலரிடத்திலோ, வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடமோ ஒப்படைக்கலாம் என்றும் http://voters.eci. gov.in என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசியல் கட்சியினரும் படிவங்களைப் பெற்று அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 17.2.2026 அன்று வெளியிட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தெரிவி த்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்ரீராம், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா,திமுக சார்பில் பி.கே.நாகராஜ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

