பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து உதவி மையங்களில் வழங்க வேண்டும் : திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் அறிவிப்பு :
திருவள்ளூர் டிச 20 : இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணியை மேற்கொள்ள கடந்த 27.10.2025 அன்று அறிவிப்பு செய்தது. இதில், 04.11.2025 முதல் 14.12.2025 வரை வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு பெறப்பட வேண்டும் என்றும், 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்றும், 19.12.2025 முதல் 18.01.2026 வரை உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலமாகவும், 19.12.2025 முதல் 10.02.2026 வரை விசாரணை மற்றும் சரிபார்ப்பு செய்து 17.02.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, திருத்தணி,திருவள்ளூர்,பூந்தமல்லி, ஆவடி,மதுரவாயல்,அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, வாக்காளர்களின் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டு, 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு உள்ளது.
மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களும், பிற மாவட்டங்களிலிருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் நபர்கள் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாத பட்சத்தில், தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள உறுதி மொழி படிவத்துடன் படிவம்-6 பூர்த்தி செய்து வழங்கிடவும் மற்றும் 01.01.2026 அன்றைய தேதியில் 18 வயதாகும் அனைத்து நபர்களும் தங்களது பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ள உறுதி மொழி படிவத்துடன் படிவம்-6 னை வழங்கிடவும், மேலும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றங்கள் இருப்பின் படிவம்-8 னை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடமோ, அப்பகுதியின் வாக்காளர் பதிவு அலுவலகத்திலோ அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலகத்திலோ வழங்கலாம். மேலும், புதியதாக வாக்காளர் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக, எதிர்வரும் 20.12.2025 (சனி) மற்றும் 21.12.2025 (ஞாயிறு) ஆகிய தினங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் உதவி மையங்கள் செயல்பட உள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து இந்த உதவி மையங்களில் வழங்கிடுமாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.