விளையாட்டு அரங்கம் கட்ட சா.மு.நாசர் பூமி பூஜை
![]()
முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்க கட்டட கட்டுமான பணிகளின் பூமி பூஜையினை அடிக்கல் நாட்டி அமைச்சர் சா.மு.நாசர் வைத்து துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் டிச 16 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்க கட்டட கட்டுமான பணிகளின் பூமி பூஜையினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி வைத்து துவக்கி வைத்து பேசினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் சட்டமன்ற பேரவையில் 44 சட்டமன்ற தொகுதிகளில் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் மொத்தம் ரூ.132 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்கம் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லி, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம் காக்களூர் ஊராட்சியிலும், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சி பகுதியிலும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் பூவலம்பேடு ஊராட்சியிலும் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.2.50 கோடி நிதியும் மற்றும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலுருந்து ரூ.50 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்படவுள்ளது. முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்கில் ஓடுதளம், நவீன உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறைகள், கூடைப்பந்து அரங்கு, கைப்பந்து அரங்கு, கோ-கோ அரங்கு ஆகியவை அமைக்கப்படவுள்ளன என அமைச்சர் கூறினார்.இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்,பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் வை.ஜெயகுமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வி.சேதுராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

