கலைஞர் மகளிர் உரிமை தொகை வங்கி பற்று அட்டை
![]()
திருவள்ளூரில் 1482 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் டிச 14 : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆம் கட்ட விரிவாக்கம் தொடக்க விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.இதனை திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம், டி.ஆர்.பி.சி.சி.சி இந்து கல்லூரியிலுள்ள கூட்டரங்கில் காணொளி காட்சி வாயிலாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டு 1482 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் குடும்ப அட்டைதரார்கள் 2.16 கோடி ஆகும். தகுதியின் அடிப்படையில் 1.13 கோடி மனுதரார்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யபட்டவர்களுக்கு 30,838 கோடி வழங்கப்பட்டது. இதுவரை அரசின் சார்பில் ரூ.26000 மாதம்,மாதம் ஒவ்வொரும் உரிமை தொகையை பெற்றிருக்கின்றார்கள்.இரண்டாம் கட்டமாக 17 லட்சம் மகளிர்களுக்கு இன்று வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 3,49,499 பயனாளிகள் இதுவரை உரிமை தொகை பெற்றிருந்தார்கள். இரண்டாம் கட்டமாக 70,450 புதிய பயனாளிகள் இதன் மூலம் பயனடைவார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 389 முகாம்கள் வாயிலாக 4 கட்டமாக பெறப்பட்ட மனுக்களில் சிறப்பு திட்ட செயலாக்க துறை சார்பில் வழங்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் கூறினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்,சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), துரை சந்திரசேகர் (பொன்னேரி), ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா,மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பாலமுருகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

