கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விரிவாக்கம்
![]()
இராணிப்பேட்டை
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2ஆம் கட்டமாக 27,158 குடும்ப மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (12.12.2025) அன்றுவெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் கட்டமாக 27,158 குடும்ப மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தானியங்கி அட்டைகள் (ATM Cards) வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார்.
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.எல்.ஈஸ்வரப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள்பேசியதாவது:-
”ஆணுக்கிங்கே பெண் நிகர்“ என்னும் சமத்துவப் பாதையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மற்றொரு மாபெரும் நலத்திட்டமாக, குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இராணிப்பேட்டை மாவட்டத்தில் ”கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்” முதற்கட்டமாக 1,70,946 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/-”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 27,158 குடும்ப மகளிர்களுக்கு இன்று முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது என மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.தனலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் திருமதி.புவனேஸ்வரி சத்தியநாதன், திரு.அசோக், திருமதி.நிர்மலா சௌந்தர், நகரமன்றத் தலைவர்கள் திருமதி.தேவி பென்ஸ் பாண்டியன், திருமதி.சுஜாதா வினோத், திருமதி.தமிழ்ச்செல்வி அசோகன், திருமதி.லஷ்மி பாரி, பேரூராட்சி தலைவர் திருமதி.கவிதா சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியர் திருமதி.கீதாலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் திரு.ராஜி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் திரு.ஞானசுந்தரம், வட்டாட்சியர் செல்வி.மகாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராணிப்பேட்டை மாவட்டம்

