திருவள்ளூரில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் :
திருவள்ளூர் டிச 13 : திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் எஸ்.கே. லலிதா தலைமை தாங்கி பேசுகையில், பெண்கள் குடும்பத்தின் முதுகெலும்பு ஆவார்கள். பெண்களுக்கு சம வாய்ப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், கௌரவம் ஆகியவற்றை உறுதி செய்தால் பெண்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் சிறந்த பெண்களாக இருப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என கூறினார்.பூண்டி ஒன்றிய ஆணையர் என். சுலோச்சனா, வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.ஆர்.சி.டி.எஸ் நிர்வாக செயலாளர் ஸ்டீபன் அனைவரையும் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர் எஸ். வனிதா, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் எதிலும் சோர்ந்துபோகாமல் வாய்ப்புகளையும், அரசு நலத்திட்டங்களையும், வங்கி கடன்களையும் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும். அனைத்து பெண்களும் படிக்க வேண்டும். பெண்கள் பொருளாதார நிலையில் உயர்ந்தால் தான் தனித்துவமாக குடும்பத்திலும் சமுதாயத்திலும் திகழ முடியும் என்று கூறினார்.பின்னர் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ். ரவிச்சந்திரன் ஆதரவற்ற விதவைகளுக்கான சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடைப்பதற்கான வழிவகை குறித்தும், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்திற்கு வருவாய் துறை துணை நிற்கும் என்று கூறினார்.
மேலும் தாட்கோ மாவட்ட மேலாளர் ஆர். சரண்யா தாட்கோ செயல்படுத்தும் திட்டங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினார். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையத்தின் உதவி இயக்குனர் கே.விஜயா வேலை வாய்ப்புகளில் ஆதரவற்ற விதவைகளுக்கு உள்ள இடஒதுக்கீடு, இலவசமாக அளிக்கப்பட்டு அரசு போட்டி தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்து கூறினார். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் மு. எழில் செல்வன் அவர்கள் மாவட்ட தொழில்நெறி மையத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் சில்ட்ரன் பிலீவ் நிறுவனத்தின் இயக்குனர் நான்சி ஜே அனபெல், வழக்கறிஞர் டான் பாஸ்கோ, போந்தவாக்கம் பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் எ. சரத்குமார், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் எம். நிஷாந்தினி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மலர்விழி ஐ.ஆர்.சி.டி.எஸ் திட்ட இயக்குனர் ப்ரீத்தி டைட்டஸ், திட்ட மேலாளர் விஜயன், ஒருங்கிணைப்பாளர்கள் பழனி,பிரியங்கா மற்றும் சரண்யா, தொண்டு நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பூங்கொடி நன்றி கூறினார்.