திருவள்ளூரில் தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்

Loading

திருவள்ளூரில் தூய்மை பணியாளர்கள் உட்பட உள்ளாட்சி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் : சிஐடியு தொழிற்சங்கத்தினர் 149 பேர் கைது :
திருவள்ளூர் டிச 10 : தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிஐடியு சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் உள்ளாட்சி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஐடியு தொழிற்சங்க மாவட்ட பொது செயலாளர் ஏ.சி.சந்தானம் தலைமை வகித்தார். இதில் பகுதி செயலாளர்கள் பி.சரிதா, கே.விமலா, எம்.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.விஜயன், துணைச் செயலாளர் கே.ராஜேந்திரன், ஜி.சங்கரதாஸ் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர்.
அப்போது, குறைந்தபட்ச ஊதியம் மாதந்தோறும் ரூபாய்.26000 வழங்க வேண்டும், தூய்மை பணியாளர், மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டர் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், கொரோனா காலத்தில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 15,000 ஊக்கத் தொகையை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு அரசு உள்ளாட்சி பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் அடுத்தடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தொழிற்சங்கத்தினர் எச்சரித்தனர். தொடர்ந்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பின் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 149 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
0Shares