பணி அனுபவமும் இல்லாத ஒப்பந்த ஊழியர்களால் தண்டம்?
![]()
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் திரு. சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் அவர்களுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதிய கடிதத்தில்..
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக தாங்கள் பொறுப்பேற்ற பிறகு, தங்களின் சீரிய தலைமையின் கீழ் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய குழு (TNRERA ADMINS) பல்வேறு தொலைநோக்கு திட்டங்களையும், முன்னோடி திட்டங்களையும், மறுசீரமைப்பு திட்டங்களையும் செய்து வருவது நிச்சயம் வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே சட்டபூர்வமாக இன்னும் கூடுதலாக நம்பிக்கையையும், புரிதலையும், பாதுகாப்பையும், வெளிப்படைத்தன்மையையும் உருவாக்கி உள்ளது. ரியல் எஸ்டேட் முதலீடுகளை பெருமளவில் உயர்த்துவதற்கும் – ஊக்குவிப்பதற்கும் தங்களின் ஆக்கபூர்வமான இச்செயல் மிகுந்த பாராட்டுதலுக்குரியது.தற்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அலுவலகம் ஏற்கனவே செயல்பட்ட அலுவலக கட்டடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அலுவலகத்தை கட்டமைப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் அலுவலகப் பணிகள் துவங்குவதற்கும் சற்று காலதாமதம் ஆகும் என்பது ஏற்புடையது தான்
அதேசமயம் தமிழகத்தில் மாநிலம் முழுவதும் ரியல் எஸ்டேட் திட்டங்களான புதிய வீட்டுமனை பிரிவு, தனி வீடுகள் குடியிருப்பு கட்டிட திட்டம், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிட திட்டம், வணிக வளாக கட்டிட திட்டங்கள் மற்றும் வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற மனை பிரிவுகள் திட்டம் போன்ற ரியல் எஸ்டேட் திட்டங்கள் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்து உத்தரவு பெற வேண்டி (TNRERA REGISTRATION) விண்ணப்பித்து மாதங்கள் கடந்தும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் பதிவு செய்து உத்தரவு வழங்காமல், கூராய்வு (SCRUTINY) என்கிற பெயரில் பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை ஆவணங்கள் சம்பந்தமாக எந்தவித சட்ட நுணுக்கமும், போதிய முன் பணி அனுபவமும் இல்லாத ஒப்பந்த ஊழியர்களால் திரும்பத் திரும்ப ஒரு முறைக்கு பலமுறை கூராய்வு செய்து காலம் தாழ்த்தியும், குறைபாடு ஆவணங்கள் (QUERIES) கோரி திரும்பத் திரும்ப அதே ஆவணங்களை ஒரு முறைக்கு பலமுறை கோரி காலம் தாழ்த்தியும் வருகின்றனர். மேலும் குறைபாடு ஆவணங்களை கோரி ஒரு முறைக்கு இரண்டு முறை கேட்டு பெற்ற பிறகும் உரிய தீர்வு ஏற்படுத்தித் தராமல் அந்த விண்ணப்பத்தை நிராகரிக்கின்றனர். இப்படி நிராகரிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களை (REAL ESTATE PROJECTS) மீண்டும் முதலிலிருந்து விண்ணப்பித்து கட்டணம் செலுத்த சொல்வது வேதனைக்குரியது.
அபிவிருத்தியாளர்கள் (BUILDERS AND DEVELOPERS) மற்றும் ரியல் எஸ்டேட் பணியை மேற்கொள்கின்றவர்கள் இதனால் மிகுந்த சிரமத்திற்கும் அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் காலநேர வீண் விரயத்திற்கும் ஆளாகியுள்ளனர். அதுமட்டுமல்ல தற்பொழுது கார்த்திகை மாதம் என்பதால் மனைகளையும் வீடுகளையும் முன்பதிவு செய்த பொதுமக்கள் நல்ல சுப முகூர்த்த தினங்களில் (AUSPICIOUS DAY) பதிவு செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். இந்த மாதத்தில் பதிவு செய்ய முடியாமல் போனால் எதிர்வரும் மார்கழி மாதம் முழுவதும் பெருமளவில் பொதுமக்கள் பதிவு செய்வதை தவிர்ப்பதோடு, தை மாதம் தான் மீண்டும் பொதுமக்கள் சுப முகூர்த்த தினங்களில் பதிவு செய்ய நேரிடும் என்கிற சூழல் உருவாகிவிடும்.
அபிவிருத்தியாளர்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் தங்களின் ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்ய விண்ணப்பித்தும் உத்தரவு பெறாமல் ஒப்புகை சீட்டின் (ACKNOWLEDGEMENT) அடிப்படையில் பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் அவர்களுக்கு உண்டான ஆவணங்களை பதிவு செய்து கொடுத்தாள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் திட்டத்தின் மதிப்பில் 10% வரை மேம்பாட்டாளர்களுக்கு தண்டம் (PENALTY) விதிக்கிறது. இது மேம்பாட்டாளர்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்துவதோடு மிகுந்த சுமையாகவும் அமைகிறது.
ஆகவே இப்படிப்பட்ட காலதாமதத்தால் பெருமளவு ரியல் எஸ்டேட் திட்டங்கள் பதிவாகாமல் முடக்கப்பட்டு ரியல் எஸ்டேட் வணிகமும் பாதிக்கப்படுகிறது. மனைகளையும் வீடுகளையும் வாங்க எண்ணுகின்ற பொது மக்களின் எண்ணங்களும் ஈடேராமல் – கனவுகளும் களைந்து பெருமளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் அவர்கள் மேற்கண்ட பிரச்சினைகளை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் விண்ணப்பித்திருக்கின்ற ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்து உடனடியாக உத்தரவு வழங்குவதற்கு தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
மேலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் விண்ணப்பித்தும் பதிவு செய்து உத்தரவு வழங்குவதற்கு காலதாமதம் ஏற்படும் ரியல் எஸ்டேட் திட்டங்களை இந்த கார்த்திகை மாத சுப முகூர்த்த தினங்களில் பதிவு செய்வதற்கு தாங்கள் அனுமதித்து,காலத்தின் அருமை கருதி போர்க்கால அடிப்படையில் அதற்கு மாத்திரம் தண்டத்தொகை விதிப்பதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும், அது குறித்த தகவலை பொதுமக்களுக்கு விழிப்புணர்வாக தாங்கள் செய்தி தாள்களிலும் ஊடகங்களிலும் செய்தியாக வெளியிட வேண்டும் எனவும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

