மாவட்டம் வட்டாரஅளவில்வெள்ளக்கண்காணிப்புக்குழு

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுரை :
திருவள்ளூர் டிச 07 : வடகிழக்குப் பருவமழைக்காலத்தில் தற்போது டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக திருவள்ளூர்  மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள 5412 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட அறிக்கை வாயிலாக அறியப்படுகிறது.பாதிக்கப்பட்டுள்ள நெல்வயல்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்காணித்திட மாவட்ட மற்றும் வட்டார அளவில் வெள்ளக்கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மைத் துறை அலுவலர்களால் வருவாய்த் துறையுடன் இணைந்து வயல் ஆய்வு மூலம் 33 சதவீதத்திற்கு மேல் ஏற்படும் பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைச்சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும், மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும். பூச்சி, நோய் தாக்குதலைத் தொடர்ந்து கண்காணித்து, பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மழை நீர் வடிந்தவுடன் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்பட வாய்ப்புள்ளது. இக் குறைபாட்டினை போக்க 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிங்க் சல்பேட் கலந்து 200 லிட்டர் நீருடன் கைத்தெளிப்பான் கொண்டு இலைவழியூட்டமாக தெளிக்க வேண்டும். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மேல் உரமாக தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து 25 சதவீதம் கூடுதலாக அளிக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நிலவரங்களை வட்டார வேளாண் அலுவர்களுக்குத் தெரிவித்து உரிய ஆலோசனைகளை பெற்று பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தோட்டக்கலைப்பயிர்களில் செடிகள், மரங்களைச் சுற்றி மண் அணைத்தல், ஊன்றுதலுக்கான குச்சிகளை நட்டுக் கட்டுதல், வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்லாண்டுப் பயிர்களில் அதன் தலைப்பகுதியின் சுமையை (மட்டை, ஓலை) குறைத்து காற்றின் வேகத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.
பசுமைக்குடில், நிழல்வலைக்குடில்களில் அதன் அடிப்பாகத்தை நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். சூரிய சக்தியினால் இயங்கும் பம்ப்செட்டுகளில் சோலார் பேனல்கள் அகற்றப்பட அல்லது அதன் சாய்வு கோணத்தினை 0° ஆக மாற்றி வைக்க வேண்டும். சூரிய சக்தி மின் வேலி அமைப்பின் சுவிட்சினை நிறுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
0Shares