புதியதாக கட்டப்படவுள்ள தோழி விடுதிக்கு பூமி பூஜை

Loading

நீலகிரி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொலி காட்சி வாயிலாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 62 கோடி 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 740 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் 12 புதிய தோழி விடுதிகள் அமைக்கும் பணிகள், கோயம்புத்தூர் “பூஞ்சோலை” அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லம் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு 27.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சென்னை, இராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் புதியதாக கட்டப்படவுள்ள தோழி விடுதிக்கு பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அரசு தலைமைக்கொறடா அவர்கள் செய்தியாளர்களிடம்தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் தோழி விடுதி கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதில் நமது மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில், ரூ.6.58கோடி மதிப்பீட்டில் தரை தளத்தில் 30 படுக்கைகளும், மேல் தளத்தில் 40 படுக்கைகளும் என மொத்தம் 70 படுக்கை வசதிகளுடன் புதியதாக தோழி விடுதி கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த தோழி விடுதி பிற மாவட்டங்களிலிருந்து மலை மாவட்டமான நமது மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அரசு தலைமைக் கொறடா அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் நிர்வாக பொறியாளர் (கோவை மண்டலம்) திரு.சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர்  பிரவீணா தேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்  பிரம்மவித்ய நாயகி, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் (கோவை மண்டலம்) உதவி செயற்பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர் பாஸ்கரன், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
0Shares