குடிநீர் மறுசீரமைப்பு பணி மு.பெ.சாமிநாதன் துவக்கம்

Loading

ஈரோடு மாவட்டம்

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்

திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்

சென்னிமலை பேரூராட்சிக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் மறுசீரமைப்பு பணியினை துவக்கி வைத்தார்.

 

ஈரோடு மாவட்டம், சென்னிமலை, வாரச்சந்தை பகுதியில்  (13.11.2025)அன்று சென்னிமலை பேரூராட்சிக்கு குடிநீர் வழங்க ரூ.15 கோடி மதிப்பிட்டிலான குடிநீர் மறுசீரமைப்பு பணியினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிற மாநிலங்கள் பின்பற்றுகின்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டமானது 1975ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்தில் உள்ள அபிவிருத்தி திட்டப்பணிகள் கடந்த 2010 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்திலிருந்து சென்னிமலை, கே.சி.பாளையம், பெருந்துறை, சித்தோடு மற்றும் நசியனூர் பேரூராட்சிகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 70 லிட்டர் வீதம் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது இடைநிலை ஆண்டான 2021-ல் 1,47,907 மக்கள் மற்றும் உச்சபட்ச ஆண்டான 2036-ல் 2,15,975 மக்கள் பயன்பெறும் வகையில் முறையே 13.39 MLD மற்றும் 19.38 MLD வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், தற்போதைய (2025) மக்கள் தொகைக்கு சென்னிமலை பேரூராட்சி- 2.31 MLD, பெருந்துறை நகராட்சி 2.77 MLD, கே.சி.பாளையம் பேரூராட்சி 3.12MLD, சித்தோடு பேரூராட்சி 0.99 MLD மற்றும் நசியனூர் பேரூராட்சி 1.44 MLD குடிநீர் தினசரி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், காவிரி ஆற்றில் கோணவாய்க்கால் அருகில் அமைந்துள்ள பழைய நீர் சேகரிப்பு கிணறானது 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. எனவே ஆற்றில் அதிகபடியான நீர்வரத்து உள்ளபோது கிணற்றிலிருந்து நீர் எடுக்க இயலாத நிலை ஏற்படுகிறது.  மேலும், கருமாண்டிசெல்லிபாளையம் நீருந்து நிலையத்திலிருந்து சென்னிமலை பேரூராட்சிக்கு செல்லும் சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டு 20 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளதால், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு சென்னிமலை பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாதவாறு, புதிய நீர்சேகரிப்பு கிணறு அமைக்கவும், கருமாண்டி செல்லிபாளையம் முதல் சென்னிமலை பேரூராட்சி வரை செல்லும் சிமெண்ட் குழாய்களை 300 மி.மீ விட்டமுள்ள புதிய வார்ப்பு இருப்பு குழாய்களாக மாற்றவும், 30 HP திறன் கொண்ட மின்இறைப்பான்களை 50 HP திறன் கொண்ட மின் இறைப்பான்களாக மாற்றவும் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு திட்டம் 20.12.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இக்கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான மறுசீரமைப்பு பணிகள் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் போது சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட 34,669 மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 2.70 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என தெரிவித்தார்.

முன்னதாக, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 16 ஏக்கர் பரப்பளவுள்ள திப்பம்பாளையம் நீர்நிலை ஒளிரும் ஈரோடு தனியார் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.40.56 இலட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தி மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப.,   ஈரோடு நாடளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ், சென்னிமலை பேரூராட்சி தலைவர் திருமதி.ஸ்ரீதேவி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழுத்தலைவர் திரு.இல.பத்மநாபன், நீர்வளத்துறை உயர் அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.

0Shares