அரசுபழங்குடியினர் உண்டுஉறைவிடபள்ளியில் கூட்டம்
![]()
கூடலூர்
கூடலூர்.அருகே பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், மற்றும் ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் சுகாதார பாதுகாப்பு என்கிற தலைப்பில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கோதை தலைமை தாங்கினார் . கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மாணவர்கள் தங்கள் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து கொள்வதன் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். நொறுக்கு தீனி மற்றும் உப்பு காரம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் சிறுவயதிலேயே சிறுநீரக பாதிப்பு, இரத்த சமமான பிரச்சனைகள், வயிற்று உபாதைகள், ஊட்டச்சத்து குறைபாடு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. ஆரோக்கியமான காய்கறிகள், கீரைகள், சிறுதானிய உணவுகள், பழங்கள் ஆகியவற்றை நன்றாக மென்று உண்பதால் உடலில் செரிமானம் அதிகரித்து, ஆரோக்கியம் கிடைக்கும் என்றார்.
ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது அவ்வப்போது கை கழுவுதல், சுத்தமான ஆடைகள் அணிதல், தினமும் குளித்தல், இருவேளை பல் துலக்குதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் தினசரி மேற்கொள்வதன் மூலம் உடலில் நோய் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

