கடம்பத்தூர் குடிநீர் மோட்டாருக்கு16 லட்சம்பாக்கி
![]()
திருவள்ளூர் நவ 09 :
கடம்பத்தூரில் குடிநீர் மோட்டாருக்கான மின் இணைப்புக்கு ரூ.16 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருப்பதால் மின் இணைப்பு துண்டிப்பு : அதிகாரிகள் அலட்சியம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு: 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் :
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அகரம் சன் சிட்டி என்ற குடியிருப்பு பகுதிக்குள் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் அடிப்படை தேவைகளான சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை குடியிருப்புவாசிகளே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் குடியிருப்பு சங்கம் அமைக்கப்பட்டு சங்க நிர்வாகத்திடம் மாதம் தோறும் அப்பகுதி மக்கள் சந்தா செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் ஏற்கனவே இருந்த சங்கத்தினர் முறையாக அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் நிலையில் தற்பொழுது புதிய சன் சிட்டி குடியிருப்பு சங்கம் உருவாக்கப்பட்டு அந்த நிர்வாகிகளிடம் சந்தா செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மின் மோட்டாருக்கான இணைப்புக்கு மின்சாரத் துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.16 லட்சம் நிலுவையில் உள்ளது. அதுபோல் குடிநீர் கட்டணமும் ஊராட்சிக்கு முறையாக செலுத்தாததால் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சன் சிட்டி பகுதி குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மின்சார வாரியமும் ஊராட்சி நிர்வாகமும் துண்டித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு மேலாக அப்பகுதிவாசிகள் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு இல்லாமல் அவதிபட்டு வந்த நிலையில் மின்சாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சன்சிட்டி குடியிருப்பு பொதுமக்கள் திருவள்ளூர் சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் இணைப்பு மற்றும் மின்சார இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். வீட்டு மின் இணைப்பிற்கான மின் கட்டணத்தை செலுத்தாத அடுத்த நாளே மின் இணைப்பை துண்டிக்கும் மின்வாரியத் துறை மூன்று ஆண்டுகளாக அலட்சியமாக இருந்தது ஏன் என்றும், மின் இணைப்பை அப்போதே துண்டிக்க வில்லை ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
எனவே மின்வாரிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கடம்பத்தூரில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று முற்றுகையிடப் போவதாகவும் எச்சரித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து தற்காலிகமாக சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

