வீடு வீடாக தீவிர திருத்தம் படிவம் விநியோகம்
![]()
திருவள்ளூர் நவ 08 :
திருவள்ளூர் நகராட்சியில் வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்ப படிவம் விநியோகம் : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் நகராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் செய்வதற்காக வீடுகள் தோறும் விண்ணப்ப படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடுகள் தோறும் கடந்த 2 நாள்களாக விண்ணப்ப விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே திமுகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மூலம் விண்ணப்ப படிவம் மொத்தமாக பெற்று, வீடுகளில் விநியோகம் செய்யப்படுகிறது. இது போன்றவைகளால் முறைகேடு நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதாக அதிமுகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து வீடுகள் தோறும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள பெரியகுப்பம் மேட்டுத் தெரு, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கினர். அதைத் தொடர்ந்து நாள்தோறும் எத்தனை படிவங்களை வழங்கப்படுகின்றன என்பது குறித்து கேட்டறிந்தார்.
அதோடு படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்து அளிக்கவும் என்பது குறித்தும், திரும்பவும் தங்களிடைமே அளிக்கவும் என்பது குறித்து விவரமாக எடுத்துரைக்கவும் என வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். அப்போது, திருவள்ளூர் நகராட்சி ஆணையாளர் தாமோதரன், வாக்குப்பதிவு அலுவலரும் வட்டாட்சியருமான பாலாஜி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

