பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டம்

Loading

நண்பரின் பிறந்த நாளை பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டம் : இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட 3 பேர் கைது :

திருவள்ளூர் நவ 06 : திருவள்ளூர் அருகே நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவை பட்டா கத்தியில் கேக் வெட்டி, கையெறி பட்டாசுகளை கொளுத்தி எரிந்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டதாக 3 பேரை மணவாளநகர் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் ஒன்றியம்,  கொப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ஒளி (23) என்ற இளைஞருக்கு கடந்த 1-ஆம் தேதி பிறந்தநாள். இதனையடுத்து இவரது  நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த அருள் (எ) அருண்குமார் (23), கனிஷ்கர் (20), மற்றும் 17 வயதுடைய 2 நண்பர்கள் என மொத்தம் 5 பேர் ஒன்றாக இணைந்து  பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.

இதில் பட்டா கத்தியில் பிறந்தநாள் கேக்  வெட்டியும், கையெறி பட்டாசுகளை கொளுத்தி வீட்டின் காம்பவுண்ட் சுவர்கள் மீது எறிவது போன்ற வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.இந்த வீடியோ பெரும் வைரலாக பரவியது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி மேற்பார்வையில் மணவாளநகர் போலிஸ் இன்ஸ்பெக்டர் பாரூக் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சிறுவர்கள் 2 பேரையும் அவரது பெற்றோர்களை வரவழைத்து  எச்சரித்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மணவாளநகர் போலீசார் தமிழ்ஒளி, அருண்குமார், கனிஷ்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
0Shares