ஜாமீன் ரத்து..நடிகை பவித்ரா கவுடா சுப்ரீம் கோர்ட்டில் மனு!
![]()
ஜாமீன் ரத்தை மறுஆய்வு செய்யக்கோரி நடிகை பவித்ரா கவுடா சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்துள்ளார்.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கடந்த ஆண்டு(2024) கொலை செய்யப்பட்டார். கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கர்நாடக ஐகோர்ட்டு சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு கூறினர். மேலும் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 3 மாதங்களாக சிறையில் உள்ளனர். இந்த நிலையில் நடிகை பவித்ரா கவுடா சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தனது ஜாமீனை ரத்து செய்ததை மறுஆய்வு செய்யுமாறு கோரியுள்ளார். இந்த மனு நாளை(வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

