மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

Loading

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்    மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள்  

தலைமையில் நடைபெற்றது.

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்,    மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்,  மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று  (31.10.2025) அன்று நடைபெற்றது.

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) மூலம் மீனவ கிராமங்களில் நடத்தப்படும் மீனவர் மற்றும் மீன்வள கணக்கெடுப்பு பணியானது நவம்பர் 3 முதல் டிசம்பர் 18 வரை 45 நாட்கள் நடைபெறும் என்றும் அதற்காக கணக்கெடுப்பிற்கு வரும் களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து தகவல்களை அளிக்குமாறு மீனவ மக்களிடம் மீன்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித்தொழிலின் போது கடலில் காணாமல் போன மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க Marine Ambulance /Helipad வசதி செய்திடவும், தூத்தூர் மீனவ கிராமத்தில் மீன்இறங்குதளம் சரிசெய்ய வேண்டியும், இனையம் பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள உயர் மின்கம்ப விளக்குகளை சரிசெய்திடவும், மேல்மிடாலம் மீனவ கிராம கடற்கரையில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தினை சுத்தம் செய்திடவும், அவ்விடத்தில் பிற பகுதியில் உள்ள கழிவுகளை கொட்டாமல் தடுத்திட வேண்டியும், மிடாலம் மீனவ கிராமத்தில் உள்ள அன்னைநகர் பகுதியில் சாலை அமைத்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் மீன்பிடித்துறைமுகங்களில் ATM  நிறுவவேண்டும் எனவும், கோவளம் கிழக்கு பகுதியில் தூண்டில்வளைவு அமைத்திடவும், கன்னியாகுமரியில் உள்ள பெரியநாயகி தெரு பகுதியில் அமைந்துள்ள தூண்டில்வளைவை நீட்டித்திடவும், ரீத்தாபுரம் அல்லி குளத்தின் உபரி நீர் வெளியேற வடிகால் வசதி செய்திடவும், இனயம் ஆழித்துறை பகுதியில் மழை பெய்யும்  போது மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதனை சரிசெய்திடவும்  கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், உதவி ஆட்சியர், பத்மநாபபுரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) கன்னியாகுமரி மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் பதில் விவரம் தெரிவிக்கப்பட்டது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித்தொழிலின் போது கடலில் காணாமல் போன மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க Marine Ambulance வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் மீன்பிடித்தொழிலின் போது இறப்பினை குறைத்திட மீனவர்களுக்கு கடலில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மீனவ விபத்து காப்பீடு நிவாரணத்தொகையினை இறப்பு நடந்த ஒரு மாத காலத்திற்குள் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் தூத்தூர் மீனவ கிராமத்திலுள்ள மீன்இறங்குதளத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இனையம் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மேல்மிடாலம் மீனவ கிராம கடற்கரையில் கழிவுகள் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மிடாலம் மீனவ கிராமத்தில் உள்ள அன்னை நகருக்கு சாலை அமைத்திட ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்பட்டினம் ஆகிய 3 மீன்பிடித்துறைமுக வளாகத்தினுள் விரைவில் ATM அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கோவளம் மற்றும் கன்னியாகுமரி, பெரியநாயகி தெருவில் உள்ள தூண்டில் வளைவை அமைக்க மற்றும் நீட்டித்திட ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  ரீத்தாபுரம் அல்லி குளத்திற்கு உபரி நீர் வெளியேற வடிகால் வசதி செய்ய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் விவரம் தெரிவிக்கப்பட்டது.

நடைபெற்ற கூட்டத்தில்  பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் திரு.வினய்குமார் மீனா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் திரு.கோபிநாத் (மீன்வளத்துறை), மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் திருமதி.பாரதி, செயற்பொறியாளர் மீன்வளம் திருமதி.பிரேமலதா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி.பத்மபிரியா, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், நாகர்கோவில், கன்னியாகுமரி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) கன்னியாகுமரி, செயற்பொறியாளர், மீன்பிடித்துறைமுக திட்டக்கோட்டம், நாகர்கோவில்,  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர்கள் நாகர்கோவில் (இ) குளச்சல், குளச்சல் (இ) தேங்காய்பட்டணம், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

———————————————————————-

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,  கன்னியாகுமரி மாவட்டம்.

0Shares