பாலியல் செய்தவருக்கு, 23 ஆண்டுகள் சிறை
![]()
திருவள்ளூர் அருகே 4 வயது குழந்தையை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 23 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ. 21 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு :
திருவள்ளூர் நவ 01 : திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தானேஷ் என்கிற யுவராஜ் (29). இவர் 2018 ம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி அதே பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை அருகிலிருந்த உறவினர் வீட்டு மாடிக்கு துாக்கிச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து, குழந்தையின் தாயார் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தானேஷ் என்கிற யுவராஜை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார்.
வழக்கின் இறுதி விசாரணை நடத்திய நீதிபதி உமாமகேஸ்வரி, குற்றவாளிக்கு தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில் பாலியல் குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், குழந்தையை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 1 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், குழந்தையை அடித்து மானபங்கம் செய்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் என மொத்தம் 23 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 21 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் குழந்தைக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார். இந்நிலையில் குற்றவாளி தானேஷ் என்கிற யுவராஜ் ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நீதிமன்ற உத்தரவை காஞ்சிபுரம் கிளை சிறை அதிகாரிகளிடம் வழங்க உள்ளனர்.

