குடியிருப்புகளை சூழந்த மழைநீரை அகற்ற மறியல்

Loading

திருவள்ளூர் அடுத்த 26 வேப்பம்பட்டு ஊராட்சியில் குடியிருப்புகளை சூழந்த மழைநீரை அகற்ற கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொது மக்கள் சாலை மறியல் : 
திருவள்ளூர் அக் 26 : திருவள்ளூர் அடுத்த 26 வேப்பம்பட்டு ஊராட்சி உதயாநகர், ராமகிருஷ்ணா நகர், ரயில் நகர், கெஜலட்சுமி நகர் கருமாரியம்மன் நகர், முருகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதியில்  கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ளது.  கால்வாய் வசதி இல்லாததால் மழை நீர் கழிவு நீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து ஆய்வு செய்ய வருகை தருவதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்ததால் பொது மக்கள் காலை 8 மணி முதல் காத்திருந்தனர். ஆனால் 11மணியளவில் அவ்வழியாக காரில் சென்ற ஆட்சியர் 26 வேப்பம்பட்டு பகுதி மக்களை சந்திக்காமல் ஆய்வு செய்யாமல் சென்றதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடிர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
மழைநீர் தேங்கும் இடத்திற்கு அங்கீகாரம் அளித்த மாவட்ட நிர்வாகம், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும், கடன் வாங்கி வீடு கட்டி குடியிருக்கும் சூழ்நிலையில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து நிற்பதால் பாம்பு, தேள், அட்டைப்பூச்சி போன்ற விஷ பூச்சிகள் தொல்லையால் உயிர் ஆபத்து இருப்பதாகவும் விரைந்து தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றவும்,  வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0Shares