களைகட்டியது தீபாவளி…சென்னையில் ஜவுளி, இனிப்பு, பட்டாசு விற்பனை படு ஜோர்!
சென்னையில் தீபாவளி விற்பனை களைகட்டியது,ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடியதால் விற்பனை படு ஜோராக நடைபெற்றது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். அந்தவகையில் சென்னையில் இன்று புத்தாடை வாங்குவதற்காக ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. காலையில் இருந்து கொட்டும் மழையிலும் ஜவுளிக்கடைகளை நோக்கி மக்கள் சென்ற வண்ணம் இருந்து வருகின்றனர்.
தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, சவுகார்பேட்டை உள்ளிட்ட சென்னையில் முக்கிய கடைத்தெருக்களில் மழையில் குடைப்பிடித்தபடி சென்று தீபாவளி ‘ஷாப்பிங்’ செய்து வருகின்றனர்.
கடைசிநேர விற்பனை என்பதற்காக மக்கள் தங்களுக்கு பிடித்த டிசைன், கலரில் துணிகளை தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
ஜவுளிக்கடைகளை தொடர்ந்து, இனிப்பு, காரம் விற்பனை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் நெய் ஸ்வீட்ஸ், காஜூ கட்லி உள்ளிட்ட சில இனிப்பு வகைகளின் விற்பனை படுஜோராக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் விற்பனையில் சற்று சுணக்கம் இருந்தாலும், கடந்த சில நாட்களாக விற்பனை நன்றாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பட்டாசு விற்பனை சென்னையில் மழை காரணமாக நேற்று சற்று மந்தமாக இருந்தது. சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடைகளில் நேற்று காலையில் மக்கள் நடமாட்டமே இல்லாத சூழல் காணப்பட்டது. நேற்று பிற்பகலுக்கு பிறகு மழை வழிகொடுத்ததால், பட்டாசு கடைகளை நோக்கி மக்கள் செல்லத் தொடங்கினர். இதனால் பட்டாசு கடைகளில் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியதாக பட்டாசு விற்பனையாளர் நலச்சங்க செயல் தலைவர் ஷேக் அப்துல்லா தெரிவித்தார்.
சமீபத்தில் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டதால், மோட்டார் சைக்கிள்கள், கார்களை ‘புக்கிங்’ செய்வதிலும் சிலர் ஆர்வம் காட்டினார்கள். அதற்கேற்றாற்போல், ஆட்டோமொபைல் கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது.சென்னையில் கொட்டும் மழையிலும் தீபாவளி விற்பனை இன்று களைகட்டி வருகிறது.