கரூர் துயர சம்பவம்..ஒரு நபர் ஆணையம் உண்மையை மறைக்கும் முயற்சி…எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
ஒரு நபர் ஆணையம் உண்மையை மறைக்கும் முயற்சி. எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர், கரூர் பரப்புரைக்கு த.வெ.க. கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியை கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்ததுதான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்று கூறினார்.
இந்நிலையில், இதற்கு முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க அரசு தவறிவிட்டது என சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அப்போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அவர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை முன்னிட்டு, சட்டசபை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, அவையில் நாங்கள் கருத்து கூறிய பின்னர் முதல்-அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். கரூர் சம்பவத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்றார்.
ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? நாங்கள் அரசியல் செய்யவில்லை. மக்களுக்காகவே பேசுகிறோம் என்றும் கூறினார்.
அரசின் அலட்சியமே காரணம். கரூர் துயர சம்பவத்திற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம். கரூர் கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. அசம்பாவிதம் நடக்க வேண்டும் என திட்டமிட்டே இந்த இடம் ஒதுக்கியுள்ளனர்.
பிரேத பரிசோதனையில் ஏன் இவ்வளவு அவசரம்? என கேள்வி எழுப்பிய அவர், ஒரு நபர் ஆணையம் உண்மையை மறைக்கும் முயற்சி. எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர்.
காவல் துறை கடுமையான பாதுகாப்பு கொடுக்காததும் 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டாக கூறினார். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, சுப்ரீம் கோர்ட்டு நடுநிலையோடு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது.