போதை இல்லா மாவட்டம் உருவாக்க முடியும்.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் பேச்சு!
போதை பழக்கத்தை நாம் குறைக்க வேண்டும் என்று அரசு சார்பாக எந்த முயற்சி எடுத்தாலும் ஒவ்வொருவரும் தனி மனித உறுதிமொழி எடுத்தால் மட்டும் தான் இந்த போதை இல்லா தமிழகம், போதை இல்லா மாவட்டம் உருவாக்க முடியும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் நல்லூர் சோதனை சாவடி அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத திருவள்ளூர் என்ற தலைப்பில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து, போதைப் பழக்கத்திற்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு தோல் பாவை கூத்து, கிராமிய கலை நிகழ்ச்சியினை பார்வையிட்டு, போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அப்பொழுது ஆட்சியர் கூறியதாவது :
பழக்கத்தை கட்டுப்படுத்துவதும் கடினமான ஒரு சவாலாக இருக்கிறது. இந்த பழக்கத்தை நாம் குறைக்க வேண்டும் என்று அரசு சார்பாக எந்த முயற்சி எடுத்தாலும் ஒவ்வொருவரும் தனி மனித உறுதிமொழி எடுத்தால் மட்டும் தான் இந்த போதை இல்லா தமிழகம், போதை இல்லா மாவட்டம் உருவாக்க முடியும் அதற்கு முக்கிய பங்கு மாணவ மாணவிகளிடம் இருக்கு அதனால தான் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களிடம் போதை இல்லா தமிழகம், போதை இல்லா பழக்கத்தை கொண்டுவர வரணும் அப்படிங்கிற ஒரு நோக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
முதலில் இந்த போதை எடுக்கும் போது எல்லாரும் அழிவின் பாதை எடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை எல்லாரும் பயம், அழுத்தம், கேலிக்கை ஆகிய காரணங்களினால் அதனை எடுத்துக் கொள்கின்றனர். நாளடைவில் அவர்களை அது முற்றிலுமாக ஆட்கொண்டு அதிலிருந்து மீண்டு வர முடியாத நிலைக்கு செல்கின்றனர். அவர்களது சிந்திக்கும் திறன், ஆற்றல், கவனம் குறைந்து குடும்பம் மற்றும் சமூக சிந்தனைகள் குறைந்து விடுகிறது. இந்த விஷயங்கள் எல்லாம் தடுக்க வேண்டும் என்றால் ஒரு பத்து நபர்களுக்கு சென்றடையும் இம்மாதிரி ஒரு செய்தி சங்கிலி தொடர் போல பல்லாயிரம் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதில் உதவி ஆணையர் (கலால்) உதவி ஆணையர் (மதுவிலக்கு) பொன் சங்கர், கணேசன், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக இயக்குநர் ஆக்ஷயா கமலேஷ், துணைவேந்தர் நாராயணபாபு, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் திரளான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.