102 வன்கொடுமை தடுப்பு வழக்குகள் பதிவு..அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் தகவல்!

Loading

திருவள்ளூரில் வன்கொடுமை தடுப்பு விழிப்பு, கண்காணிப்பு குழு, தூய்மை பணியாளர் நலவாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு, தூய்மை பணியாளர் நலவாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொண்ட துறை மற்றும் அயோத்திதாச பண்டிதர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவு வழக்கில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு வழங்கும் தீருதவி தொகை உரிய காலக்கெடுவிற்குள் வழங்குவது தொடர்பாகவும், வன்கொடுமை நிலுவை வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் 102 வன்கொடுமை தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணைக்கு நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 80. மாவட்டத்தில் இதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தீருதவி தொகை 47 நபர்களுக்கு ரூ.53.25 இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் 39 நபர்களுக்கு ரூ.44.20 இலட்சம் மதிப்பிலும், பழங்குடியினர் 8 நபர்களும் ரூ.9.05 இலட்சம் மதிப்பிலும் பயன் பெற்றுள்ளனர். கூடுதல் தீருதவி ஓய்வூதியம் 28 நபர்களுக்கும், அரசு பணி 22 நபர்களுக்கும், கல்வி கட்டணத்தொகை 13 நபர்களுக்கும், பட்டா 18 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, பொன்னேரி சார் ஆட்சியர் கு.ரவிக்குமார்,ஆவடி காவல் துணை ஆணையர்கள் கே.பெரோஸ் கான் அப்துல்லா,பா.பாலாஜி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செந்தில் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares