வழக்கறிஞருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் ..வழக்கறிஞர்கள் மறியல்!
திருநின்றவூரில் பல்வேறு வழக்குகளில் பிரபல ரவுடிக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததால் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சடகோபன் (எ)ராஜராஜன் என்பவர் வீட்டுமனை மோசடி வழக்கு ஒன்றில் திருவண்ணாமலையைச் சேர்ந்த புவனேஷ், உத்திர மேரூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோருக்கு ஆதரவாக ஆஜரானதாக கூறப்படுகிறது. இதனால் எதிர் தரப்பான திருநின்றவூர் கொசவன்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி பூபதி (எ) வெங்கேடச பூபதிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதே போல் பரவலாக பல்வேறு வழக்குகளில் பூபதிக்கு எதிராக வழக்கறிஞர் ஆஜராவதால் கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அதே போல் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டு வாசலில் நிறுத்திவைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான காரையும் வெடிகுண்டு வீசி தீக்கிரையாக்கியதாக திருநின்றவூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கைது செய்த போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு ஜாமிீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நீதிபதியை சந்தித்து முறையிட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கூட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞர் சடகோபனை செல்போனில் தொடர்புகொண்ட ரவுடி பூபதி, எனக்கு எதிராக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மீட்டிங் போடுறீங்களா… உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, நீதிமன்ற வளாகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்கும் வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர்.