தமிழகத்தில் இன்று 10 ஆயிரம் கிராமசபை கூட்டங்கள் ..முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்!

Loading

தமிழகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெறும் 10 ஆயிரம் கிராமசபை கூட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ககன்தீப்சிங் பேடி, “கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார். 11-ந் தேதி இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.

முதல்-அமைச்சர் பேசி முடிந்த பிறகு கிராம சபைகளில் 16 பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்த கூட்டங்களில்,. நம்ம ஊரு நம்ம அரசு என்ற திட்டத்தின்படி ஊராட்சியில் அதற்கான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இழிவுபடுத்தும் பொருள் தரும் சில சாதிப் பெயர்களை குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், பொதுப்பகுதிகளுக்கு வைத்திருந்தால் அந்த பெயரை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்தப் பெயரையும் மாற்றம் செய்ய வேண்டாம் என்று மக்கள் விரும்பினால் அதை மாற்றத் தேவையில்லை.

பெயர் மாற்றம் செய்யப்பட்டால் அரசு முடிவு செய்து அரசிதழ் பிறப்பிக்கப்படும். கிராமங்களில் ஏழ்மையாக உள்ள குடும்பங்களுக்கு ஏழ்மை ஒழிப்பு கடனுதவியை வழங்கும் திட்டம் உள்ளது. இதற்காக கிராம வறுமை ஒழிப்பு பெண்கள் குழு வீடு வீடாகச் சென்று, யார் யார் மிக ஏழ்மையான குடும்பம் என்பதை கண்டறிய உத்தரவிட்டிருந்தோம். அதற்கான பட்டியல் உள்ளது.

இதுதவிர மழைநீர் சேகரிப்பு, கொசு – டெங்கு ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் நிலை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். இழிவுபடுத்தும் அர்த்தம் தரும் சாதிப் பெயர்கள் நீக்கம் குறித்த அரசாணை பற்றி மட்டும்தான் நான் விளக்கம் அளிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

இன்று நடைபெற உள்ள நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சி, கோவை மாவட்டம் வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முதல்-அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாட உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

0Shares