ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்திற்கும் 15 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும்.. மாவட்ட ஆட்சியரிடம் மனு!
![]()
தமிழகத்தில் அனைத்து ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்திற்கும் 15 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் மற்றும் சரக்கு வாகன ஆட்டோ ஓட்டுநர்கள் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டு காலமாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் பன்னாட்டு நிறுவனங்களான ஓலா, ஊபர், ராப்பிட்டோ போன்றவைகளின் வரத்து காரணமாக தொழில் மிகவும் நலிவடைந்து குடும்பங்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்
ஆந்திரா அரசாங்கம் அத்தகையவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆட்டோ டிரைவர் சேவை என்ற திட்டம் மூலமாக 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது அதே போன்று தமிழகத்தில் ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கும் வருடத்திற்கு 15 ஆயிரம் நிதி உதவி வழங்கிட வேண்டி இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் விதமாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று திருவள்ளூர் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் அடுத்த கட்டமாக ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

