அடுத்த அதிர்ச்சி..வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை!

Loading

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூரு அருகே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தலகட்டாபுராவில் உள்ள அவலஹள்ளியைச் சேர்ந்த என்ஜினீயரான சைலேசுக்கும், நவ்யாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. திருமணமான சிறிது காலம் 2 பேரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

திருமணத்தின்போது சைலேஷ் கேட்ட வரதட்சணையை நவ்யாவின் பெற்றோர் கொடுத்திருந்த நிலையில் மீண்டும் அவரது குடும்பத்தினர் நவ்யாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு வற்புறுத்தினர். சம்பவத்தன்றும் நவ்யாவிடம் வரதட்சணை குறித்து கேட்டு சைலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் விரக்தியடைந்த நவ்யா வீட்டில் இருந்த படுக்கை அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். உயிருக்கு போராடிய அவரை சைலேஷ் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்து விட்டதாக நவ்யாவை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த நவ்யாவின் பெற்றோர், சைலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தலகட்டாபுரா போலீசில் புகார் அளித்தன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0Shares