எனது விருப்பம் அதுதான்..மீண்டும் செங்கோட்டையன் முழக்கம்!

Loading

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் பேச்சும், செயல்பாடுகளும் தான் கடந்த சில நாட்களாக அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.இதையடுத்து செங்கோட்டையனுக்கும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் உட்கட்சி மோதல் நீடித்து வந்தது . அப்போது அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்கவேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்ததற்கு பதிலடியாக அவரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.

இதையடுத்து டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் செங்கோட்டையன் அதை மறுத்துள்ளார்.இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இன்றைய தினம் அரசியல்வாதிகள் யாரையும் நான் சந்திக்கவில்லை. திருமண நிகழ்ச்சிக்காக சென்னை வந்துள்ளேன். நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று இரவே ஈரோட்டிற்கு செல்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறினார்.

தொடர்ந்து உங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்விக்கு “பொறுத்திருந்து பாருங்கள்” என சிரித்தபடி செங்கோட்டையன் பதில் அளித்து அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

0Shares