4 வயது குழந்தை கடத்தல் ..வேலூரில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!
மர்ம நபர் ஒருவர் திடீரென வேணு வீட்டிற்குள் நுழைந்து அவர் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு, சிறுவன் யோகேஷை தூக்கி சென்றுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 4 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே காமாட்சி அம்மன்பேட்டையை சேர்ந்த பாலாஜி என்பவர் கைதான நிலையில் அவரது நண்பர் விக்கி என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கைதான இருவரும் பணத்துக்காக குழந்தையை கடத்தியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பவளக்காரதெருவை சேர்ந்த தம்பதி வேணு , ஜனனி . இவர்களது மகன் யோகேஷ் , சிறுவன் யோகேஷ் குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.
இந்திநிலையில் நேற்று பள்ளியில் இருந்து சிறுவன் யோகேஷை அவனது தந்தை வேணு ஸ்கூட்டரில் வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வேணு வீட்டிற்குள் நுழைந்து அவர் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு, சிறுவன் யோகேஷை தூக்கி சென்றுள்ளார்.
தனது கண்ணெதிரே மகன் கடத்தப்படுவதை கண்ட வேணு அதிர்ச்சி அடைந்து, விரட்டிச்சென்றார். ஆனால் அந்த நபர் அங்கு நின்று கொண்டிருந்த காரில் ஏறி தப்ப முயன்றார் . அவரை வேணு பிடிக்க முயன்றபோது காரில் இருந்த மர்ம நபர்கள் இழுத்து சென்றனர்.பின்னர் அவர் கீழே விழுந்ததும் கார் வேகமாக சென்றுவிட்டது.
இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக வேணுவின் வீட்டின் அருகே நிறுத்தி நோட்டமிட்டு, சிறுவனை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்த கார் உள்ளி கூட்ரோடு வழியாக திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் ஜீப், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மாவட்டம் முழுவதும் கடத்தப்பட்ட சிறுவனை தேடிவந்தனர். தேவிகாபுரம் பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே சிறுவனுடன் சிலர் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது காரில் வந்த ஒரு கும்பல் மதியம் 2.30 மணி அளவில் சிறுவனை இறக்கிவிட்டு சென்றதாக கூறப்பட்டது.
பின்னர் சிறுவனை பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், சிறுவன் யோகேஷை பெற்றோரிடம் ஒப்படைத்தார். கடத்தப்பட்ட 2 மணி நேரத்துக்குள் சிறுவன் மீட்கப்பட்டான். இந்த குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சிறுவன் கடத்தல் தொடர்பாக குடியாத்தம் பவளக்கார தெருவில் வேணுவின் வீட்டிற்கு அருகே வசிக்கும் தினகரன் மகன் பாலாஜி என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.