புதுவை நகராட்சி அலட்சியமான போக்கு.. ஓம்சக்தி சேகர் கண்டனம்!
அதிமுக உரிமை மீட்பு குழு புதுவை மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் அவர்கள் புதுவை முதல்வர் திரு.ரங்கசாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில்:புதுவை நகராட்சியின் அலட்சியமான செயல்பாடுகள் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களிடையே பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலப்பதால் மக்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
நகரப் பகுதிகளில், குறிப்பாக நெல்லித்தோப்பு மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகளில் இந்த பிரச்சனை தீவிரமாக உள்ளது. நெல்லித்தோப்பு தொகுதிக்குள் உள்ள சக்தி நகர் பகுதியில் 15 நாட்களுக்கு முன்பு நகராட்சியின் அலட்சியத்தால் குடிநீரில் கழிவுநீர் கலந்தது. இதனால் மக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்தனர். அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண, எனது தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு அப்பகுதியில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், நேற்றைய தினம் நெல்லித்தோப்பு தோட்டக்கால் பகுதியில் நகராட்சி பணிகள் நடைபெற்றபோது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்பார்வை செய்யாததால் மீண்டும் கழிவுநீர் குடிநீரில் கலந்தது. இதனால் 15-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நான் பலமுறை வலியுறுத்தியபடி, நகராட்சி அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யவில்லை என்பதே இங்கும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.
மேற்கண்ட இரு சம்பவங்களிலும் அதிகாரிகளின் அலட்சியமே பிரதான காரணம் என்பது தெளிவாகிறது. சம்பந்தப்பட்ட இடங்களில் அதிகாரிகள் நேரடியாக பங்கேற்றிருந்தால் இந்த பிரச்சனைகளை எளிதாகத் தவிர்த்திருக்க முடிந்திருக்கும். ஆனால், நகராட்சி ஆணையர், செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் போன்ற பொறுப்புப் பதவிகளில் உள்ளவர்கள் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்வதை தவிர்த்து, கீழ்நிலை ஊழியர்களின் மீது மட்டும் பொறுப்பை தள்ளி விட்டு அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு செயல்படுவது பெரும் குறையாகும்.
இதற்கும்மேல், நேற்றைய தினம் தோட்டக்கால் பகுதியில் வாய்க்கால் பணிக்காக இயந்திரம் மூலம் தோண்டும்போது, சம்பந்தப்பட்ட ஒர்க் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒப்பந்ததாரர் யாருமே இல்லாததால் மின்கம்பிகளும் குடிநீர் குழாய்களும் கடுமையாக சேதமடைந்தன. மேலும், சதுர அடிக்கு ரூபாய் தொகை வசூலித்து தாறுமாறாக சாலைகளை உடைத்து அனுமதி வழங்கி, பின்னர் அந்த பள்ளங்களை சரிசெய்யாமல் விட்டதால் பெரும்பாலான விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
இத்தகைய சூழ்நிலைகள் அனைத்தையும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அவசரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.எனவே, நான் வலியுறுத்துகின்றேன்:சம்பந்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய நகராட்சி அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.அவர்கள் மீது துறைத்தரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.நகராட்சி தொடர்பான பணிகள் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாயம் நேரில் பங்கேற்க வேண்டும் என்ற ஆணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.