அதிமுகவை உடைக்க, பிளக்க எத்தனையோ சதி.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு!
அதிமுகவை உடைக்க, பிளக்க எத்தனையோ சதி செய்து பார்த்தார்கள். ஆனால் அதை அதிமுக தொண்டர்கள் முறியடித்தனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது.தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி இன்று நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பஸ் நிலையம் அருகே திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,ஏழை மக்களை பற்றி கவலைப்படாத ஒரே முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழகம் போதை இல்லாத தமிழகமாக மாற்றப்படும்.
திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் டாஸ்மாக் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி தண்டனை பெற்று தருவோம்.
அதிமுகவை உடைக்க, பிளக்க எத்தனையோ சதி செய்து பார்த்தார்கள். ஆனால் அதை அதிமுக தொண்டர்கள் முறியடித்தனர். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. அத்தனை தொண்டர்களும் அதிமுகவை தாங்கி பிடித்துக்கொண்டுள்ளனர். அதிமுகவுக்கு எவ்வளவோ சோதனையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவை அத்தனையும் அதிமுக தொண்டர்களால் தூள்தூளாக்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.