மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரம்.. தாயை எரித்துக்கொன்ற மகன்!
மதுகுடிக்க பணம் தராததால் மகன், தாயை மண்எண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், நத்தம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எஸ்தர் . இவரது மகன் விக்டர் ராஜேந்திரன் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சர்க்கரை ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இவரை ஆலை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் செங்கல்பட்டு நத்தம் பகுதியில் உள்ள தனது தாயாருடன் விக்டர் ராஜேந்திரன் வசித்து வந்தார். அப்போது மது போதைக்கு அடிமையான விக்டர் ராஜேந்திரன் தினந்தோறும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி மதுகுடிப்பதற்காக தனது தாய் எஸ்தரிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு தாய் பணம்தர மறுத்ததனால் ஆத்திரம் அடைந்த விக்டர் ராஜேந்திரன் தாய் என்று கூட பார்க்காமல் மண்எண்ணெய் எடுத்து தாயின் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் அலறி துடித்த எஸ்தரின் குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் எஸ்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயை கொலை செய்த விக்டர் ராஜேந்திரனை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.