கலியாகிறது ஓபிஎஸ் கூடாரம்..முக்கிய புள்ளி திமுகவில் ஐக்கியம்!
ஓபிஎஸ் அணியில் இருந்த மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிளவுகளாக நிர்வாகிகள் பிரிந்துள்ளனர். இதன் காரணமாக வாக்குகள் சிதறி தொடர் தோல்விகளை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக அதிமுகவின் தொண்டர்கள் அதிருப்தியின் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளனர். எனவே கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாக்குகள் சிதறுவதால் எளிதாக கிடைக்கக்கூடிய வெற்றிகள் கூட கை நழுவி செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான திட்டங்களை வகுத்துள்ளதாக கூறியுள்ளார்.
பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்க வேண்டும் என கடைசிவரை இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது.
இந்தநிலையில் அதிமுகவில் பயணித்து வந்த மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமி – ஓ பன்னீர் செல்வம் இடையே பிளவு ஏற்பட்ட போது, ஓ பன்னீர் செல்வம் அணியில் இணைந்து பயணித்தார். ஆனால், ஓபிஎஸ் அணியிலும் அதிருப்தியில் இருந்து வந்த அவர் தனது எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தும், தவெக தலைவர் விஜய் ஆதரவு நிலைப்பாட்டுடன் பதிவுகளை போட்டு வந்தார்.
இந்த நிலையில், இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார் மருது அழகுராஜ். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக வேட்பாளராக போட்டியிட்டார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.