ஆந்திர வனப்பகுதியில் நாகையை சேர்ந்த 4 பேர் கொலை..கொலைக்கான காரணம் என்ன?
ஆந்திர வனப்பகுதியில் நாகையை சேர்ந்த 4 பேரை கொலை செய்தவர்கள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டை-பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பாகாலாவை அடுத்த மூலவங்கா வனப்பகுதியில் கடந்தசில நாட்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிணமாகக் கிடந்தனர்.
4 பேரின் உடல்களை பாகாலா போலீசார் மீட்டு விசாரணை நடத்தியதில் 4 பேரும் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த ப.கொந்தகை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மனைவி ஜெயமாலா, மகள்கள் தர்ஷினி, ஹர்ஷினி ஜெயமாலாவின் பெரியம்மா மகன் கலைச்செல்வம் என்பதும் தெரியவந்தது.
ஜெயமாலா தனது 2 குழந்தைகளுடன் பி.கொந்தகை கிராமத்தில் வசித்து வந்தார். ஜெயமாலாவின் கணவர் வெங்கடேஷ் குவைத்தில் வேலை பார்த்து வந்தார். வெங்கடேஷ் குவைத்தில் இருந்து மனைவி ஜெயமாலா பெயரில் அடிக்கடி பணம் அனுப்பி வைக்கும் பணத்தை கலைச்செல்வம் மூலம் வட்டிக்கு விட்டு வந்தார். வட்டித் தொழிலில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்தநிலையில் வெங்கடேஷ் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் குவைத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது அவர், தனது மனைவி ஜெயமாலாவிடம் தான் அனுப்பிய பணத்தை என்ன செய்தாய்? எனக் கேட்ட போது எந்தப் பதிலும் கிடைக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு வெங்கடேஷ் குவைத் சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வெங்கடேஷ் தனது மனைவி, 2 மகள்களை காணவில்லை, என்ற தகவலை கேள்விப்பட்டு குவைத்தில் இருந்து சொந்த ஊருக்கு மீண்டும் திரும்பி வந்து, திட்டச்சேரி போலீசில் மனைவி, மகள்களை காணவில்லை, எனப் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தான் திருப்பதி மாவட்டம் பாகாலாவை அடுத்த பனப்பாக்கம் அருகே வனப்பகுதியில் ஜெயமாலா, மகள்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
வட்டித்தொழிலில் பிரச்சினை ஏற்பட்டதால் எழுந்த முன்விரோதத்தில் 4 பேரும் கடத்தி கொலை செய்யப்பட்டு, உடல்களை ஆந்திர வனப்பகுதியில் வீசி இருக்கலாம், எனப் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் குறித்து ஆந்திர போலீசார் தமிழக போலீசாருடன் இணைந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.