சொன்னீர்களே! செய்தீர்களா? – விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்!
![]()
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டினை தொடர்ந்து, திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார். காந்தி மார்க்கெட் மரக்கடை அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு வாகனத்தின் மேல் நின்றபடி விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அந்த காலத்தில், போருக்கு செல்வதற்கு முன்னால், போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமியை கும்பிட்டு விட்டுதான் செல்வார்கள். அதேபோல் தேர்தலுக்கு செல்வதற்கு முன்னால் நம்முடைய மக்களை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன்.
திருச்சியில் தொடங்கிய எல்லாமே திருப்புமுனையாக அமையும் என்று சொல்வார்கள். அதற்கு உதாரணமாக அண்ணா 1956-ல் தேர்தலில் நிற்க நினைத்தது திருச்சியில்தான். அதன்பிறகு எம்ஜிஆர் 1974-ல் முதல் மாநாட்டை நடத்தியதும் திருச்சியில்தான். பெரியார் வாழ்ந்த இடம். மலைக்கோட்டை இருக்கும் இடம். மதசார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பெயர் போன இடம்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 505 வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்கள்? டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணக்கீடு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம், 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புவது. இந்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது?
நாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை. திருச்சி மக்களுடைய சத்தம் கேட்கிறதா முதல்வர் அவர்களே?
திமுக-வைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. மகளிர் விடியல் பயணம் என்று அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் பெண்களை ‘ஓசி ஓசி’ எனச் சொல்லிக்காட்டி அவமானப்படுத்துகின்றனர். மகளிர் உதவித் தொகை எல்லோருக்கும் தருவதில்லை. சிலருக்கு கொடுத்துவிட்டு சொல்லிக் காட்டுகிறார்கள்.
ஆனால், கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பிலும், சட்டப் பிரச்னைகளிலும் சமரசம் என்பதே கிடையாது. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.

