‘ரெயிலில் கடத்தி வரப்பட்ட 23 கிலோ கஞ்சா..முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா?
கோவையில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கஞ்சாவை ரெயிலில் கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் போதை பொருட்கள் நடமாட்ட நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இதனை கட்டுப்படுத்த காவல்துறையும் பல்வேறு யுத்திகளை கையாண்டு நடவடிக்கையை தீவிரப் படுத்தி உள்ளனர். இருந்த போதிலும் ஆங்காங்கே கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் போன்ற சம்பவங்களும் அடுத்து அடுத்து அரங்கேறி வருகின்றன.
இந்தநிலையில் கோவையில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை ரெயில் நிலையத்திற்கு வந்த திருவனந்தபுரம் கொச்சுவேலி-கோரக்பூர் ராப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவை ரெயில்வே பாதுகாப்பு படையின் குற்றத்தடுப்பு மற்றும் சிறப்பு படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் கழிப்பறையின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பைகள் இருந்தன.
அப்போது ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி தேவராஜன் முன்னிலையில் திறந்து பார்த்தனர். அப்போது அந்த 4 பைகளில் மொத்தம் 23 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.11½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை ரெயிலில் கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் கோவைக்கு கஞ்சா கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரெயில்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.