பொது சேவை மையங்கள் அனைத்து நாட்களும் செயல்பட வேண்டும்..OPS தரப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு!
E-KYC திட்டத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது சேவை மையங்கள் செப்டம்பர் மாத இறுதி வரை திறந்திருக்க அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:உச்சநீதிமன்றம் உத்தரவின்படியும் உணவு மற்றும் பொது விநிநோயக அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படியும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் E-KYC செய்யும் பணி பொதுசேவை மையங்களில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. அனைத்து அரசு சலுகைகளும் சரியான பயனாளிகளை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கவே இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ரேஷன் அட்டைகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேரில் சென்று இந்த மின்னனு சரிபார்ப்பு முறையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பொதுசேவை மையங்கள் காலை 9.00 மணிமுதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்குகின்றன. அப்படியிருக்கும் போது பணிக்கு செல்லும் மக்கள் இந்த மின்னனு சரிபார்ப்பு முறையை செய்ய முடியவில்லை. மாலை 6 மணிக்குமேல் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருக்கும் நிலையில் 6 மணிக்கு மேல் E-KYC செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் இந்த E-KYC சரிபார்க்கும் முறை முடியும் வரையில் அனைத்து பொது சேவை மையங்களும் இரவு 8 மணி வரை திறந்திருக்கவும்.
மேலும் பணிக்கு செல்வோர் பயன்பெறும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுசேவை மையங்கள் வரும் செப்டம்பர் மாதம் இறுதிவரை திறந்திருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வயதான பயனாளிகளுக்கு கைரேகை மற்றும் கண்ரேகை ஆகியவை சரியாக வராததால் உருவாகும் பிரச்சனையை தடுக்கும் பொருட்டு புகைப்படம் எடுத்து ஒருமுறை கடவுச்சொல் பெற்று E-KYC செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என -அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.