துணை தாசில்தார் பணிக்கான தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்..மாணவர்கள் கூட்டமைப்பு திடீர் போர்கொடி!
புதுச்சேரியில் வருகின்ற 31.08.2025 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு (UPSE) நடக்க உள்ள சூழலில் நீண்ட நாட்களாக புதுச்சேரியில் எதிர்பார்த்திருந்த துணை தாசில்தார் பணிக்கான தேர்வும் ஒரே நாளில் நடத்த இருப்பதால் தேர்வு தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் கூறியுள்ளதாவது:புதுச்சேரி மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 22, 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில் UPSE தேர்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடத்தப்படும் துணை தாசில்தார் பணி நியமனத்திற்கான தேர்வு 31.08.2025 அன்று நடத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது
இதில் மத்திய தேர்வாணைய பணி தேர்வுக்கு புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு தேர்வு எழுதும் மையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். UPSE மற்றும் துணை தாசில்தார் இரண்டு தேர்வுகளும் மிக முக்கியமானதும் பல இளைஞர்களின் கனவுகளாக இருந்து வரும் பணி நியமன தேர்வு என்பதனால் ஒரே நாளில் இரண்டு தேர்வும் நடத்தப்படுவது பட்டதாரி இளைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உருவாக்கி உள்ளது
எனவே மாண்புமிகு துணைநிலை ஆளுநர், மாண்புமிகு முதல்வர் இவ் விவகாரத்தில் தலையிட்டு மத்திய தேர்வாணைய தேர்வு ஒத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்தும் தேர்வின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் துணை தாசில்தார் பணி நியமனத்திற்கான தேர்வை மறுதேதியில் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.