காமராஜரின் அரசியல் குரு திரு.தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் பிறந்ததினம்!.
சுதந்திர போராட்ட வீரர், பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் குரு திரு.தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் பிறந்ததினம்!.
விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் பிறந்தார். இவர் நாடகம், இசை உள்ளிட்ட கலைகளிலும் ஆர்வம் கொண்டவர். சமூக சீர்திருத்தச் சிந்தனை மிக்கவர்.
சென்னை பார்த்தசாரதி கோவிலில் 1930-ல் தேசிய கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர் என்றார் காந்தியடிகள். சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம், சத்தியாகிரகம் ஆகியவற்றில் இவரது பங்கு மகத்தானது. தனது அனைத்து சொத்துகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்.
இவரது ஒப்பற்ற பணியை நினைவுகூர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சத்தியமூர்த்தி பவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் என்றெல்லாம் புகழப்பட்ட சத்தியமூர்த்தி, முதுகுத்தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு 56வது வயதில் 1943 மார்ச் 28 ஆம் தேதி அன்று மறைந்தார்.
ஐயா திரு.G.K.மூப்பனார் அவர்கள் பிறந்ததினம்!.
அரசியல் நாகரிகத்தின் இலக்கணம் மக்கள் தலைவர் ஐயா திரு.G.K.மூப்பனார் அவர்கள் பிறந்ததினம்!.
ஐயா ஜி. கே. மூப்பனார் (G. K. Moopanar ஆகஸ்ட் 19, 1931 – ஆகஸ்ட் 30, 2001) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் கோவிந்தசாமி மூப்பனார் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு புதல்வராக பிறந்தவர்.
இவர் தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்கு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 2001 ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று காலமானார்.