போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுபடுத்த ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.. அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தேனி மாவட்டம்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை தொடர்பான ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும்
ஆயத்தீர்வை தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் மரு.சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்கள், மதுரை மண்டல
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை காவல் கண்காணிப்பாளர்
திரு.சந்திரசேகரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு அரசின் சார்பில் போதைப்பொருட்களை முற்றிலும்
ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தேனி மாவட்டத்தில், போதைப் பொருட்களை
முற்றிலும் ஒழித்திடும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களிடையே
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணிகள், விழிப்புணர்வு
நாடகங்கள், பல்வேறு விதமான போட்டிகள் நடத்துதல் மற்றும்
பொதுஇடங்களில் விளம்பர பதாகைகள் வைத்தும், பொதுமக்களுக்கு துண்டு
பிரசுரங்கள் வழங்கியும், தெருக்கூத்துகள் மூலமும் விழிப்புணர்வு பணிகள்
மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மருந்தகங்களில் தடைசெய்யப்பட்ட மருந்துகளை
விற்பனை செய்வதை தடுக்கவும், போதைப்பொருள் விற்பனை மற்றும்
புழக்கத்தினை தடுக்க சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.
தமிழக அரசால் உரிமம் வழங்கப்பட்டுள்ள இடங்களை தவிர்த்து
மதுபானங்கள் விற்பனை செய்தல் மற்றும் மது அருந்துதல் கண்டறியப்பட்டால்
அவர்கள்மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேனி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்
ஜீலை மாதம் வரை காவல்துறையினரால் 255.579 கிலோ கிராம் கஞ்சா மற்றும்
163 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 271 குற்றவாளிகள் கைது
செய்யப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க
நடத்தப்பட்ட ஆய்வுகளில் தற்போது வரை 296 கடைகளுக்கு சீல்
வைக்கப்பட்டு, ரூ.75,25,000/-அபராதம் விதிக்கப்பட்டு, சுமார் 2042.864 கிலோ
கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு
305 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக
தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு, தேனி மாவட்டத்தை போதை இல்லா
மாவட்டமாக மாற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து
செயலாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, போதைப்பொருட்கள் உபயோகத்தை
தடுப்பது குறித்து ஒவ்வொரு துறையினரின் பணி முன்னேற்றம் தொடர்பாக
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில், துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு)
திரு.சீராளன், உதவிஇயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கிறிஸ்டோபர்தாஸ், உதவி
ஆணையர் (கலால்) திருமதி முத்துலெட்சுமி, மாவட்ட நியமன அலுவலர்
(உணவு பாதுகாப்புத்துறை) மரு.சசிதீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.