கிரீன் வாரியர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்..எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல் !
புதுச்சேரி அரசையும், துப்புரவுத் தொழிலாளர்களையும் ஏமாற்றி பணம் பறிக்கும் கிரீன் வாரியர் துப்புரவு நிறுவனத்தின் 19 ஆண்டுகால ஒப்பந்தத்தை புதுச்சேரி அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: –
புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளில் குப்பை சேகரிக்கும் பணியில் கடந்த ஜூன் 1–ஆம் தேதி முதல் புதுச்சேரி உள்ளாட்சித் துறை சார்பில் கிரீன் வாரியர் என்ற நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன்பு இப்பணியை செய்து வந்த ஸ்வட்சதா பாரத் நிறுவனம் எங்கெல்லாம் குப்பை தொட்டிகள் வைத்து குப்பைகளை சேகரித்தார்களோ அங்கெல்லாம் கிரீன் வாரியர் நிறுவனம் குப்பைத் தொட்டி வைக்காமல் உள்ளதால் குப்பைகள் சாலை முழுவதும் சிதறி அறுவறுப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் ஆங்காங்கே தொற்றுநோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வீடுகளிலும் முறையாக குப்பைகளை சேகரிப்பதில்லை. ஆனால் அதே சமயத்தில் குப்பைகளின் எடையை அதிகரிக்கவும், நாளுக்கு நாள் குப்பை டன் அளவுகள் உயர்ந்திடவும் சாலையோர மண், கட்டிட இடிபாடுகள் போன்றவற்றை ஏற்றி அரசிடம் அதிக எடையை கணக்கு காட்டி பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் அரசுப் பணம் டன்னுக்கு ரூ. 4500 என்று கொள்ளை அடிக்கப்படுகிறது.
தினம் இத்தனை டன் குப்பை தரவேண்டுமென்று தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்பட்டு கசக்கிப் பிழிய படுகின்றனர். கடந்த ஒப்பந்தத்தில் மாதம் ரூ. 2 கோடி செலவு செய்த அரசு இந்த ஒப்பந்தத்தில் ரூ. 4 கோடியே 50 லட்சம் அளவுக்கு செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வெறும் குப்பைகளை சேகரிப்பது மட்டுமின்றி அவைகளை தரம் பிரித்து முறைப்படுத்த வேண்டும் என்ற நிலையில் ஒப்பந்ததாரர்கள் வெறும் சேகரிப்பு பணியை மட்டும் தான் செய்கிறார்கள். தொழிலாளர்களை பொறுத்தவரை புதுச்சேரி ஒப்பந்த தொழிலாளர் சட்டப்படி அவர்கள் செயல்பட வேண்டும். ஆனால் விதிகளுக்கு முரணாக இந்த நிறுவனம் தொழிலாளர்களை கொத்தடிமைகள் போல் நடத்துகின்றது.
தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச மாத கூலி ரூ. 12 ஆயிரத்து 135 கொடுக்க வேண்டும். ஆனால் சென்ற ஆகஸ்ட் மாதம் வெறும் ரூ 6 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை கூலி கொடுக்கப்பட்டு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கப்பட்டு இருக்கிறது. ஆகஸ்ட் 15, 16 விடுமுறையில் பணி செய்யும் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அதையும் இந்நிறுவனம் மறுத்து வருகிறது. துப்புரவு தொழிலாளர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டிய நிலையில் ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்காமல் அவர்களிடம் வேலை வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் விடுமுறை எடுத்ததாக அனைத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு சட்டப்படி பிடித்தம் செய்ய வேண்டிய பிஎப் மற்றும் இஎஸ்ஐ தொகையை அதற்கான அலுவலகத்தில் கட்டுவதில்லை. இஎஸ்ஐ பணம் செலுத்தாததால் தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால் எந்தவித நிவாரணமும் பெற முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். வேலையில் அவர்களுக்கான பாதுகாப்பு சாதனங்களான முகக்கவசம், கையுறை, ஷூ முதலிய எதுவும் வழங்காதது மட்டுமின்றி பெருக்கும் துடைப்பம் கூட தொழிலாளர்கள் எடுத்துவர வேண்டிய அவலம் உள்ளது. வேலை என்ற பெயரில் தொழிலாளர்களை நாள் முழுக்க குப்பை வண்டியிலேயே அடைத்து வைப்பதால் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. எவ்வித பரிசோதனையோ, தடுப்பூசியோ அவர்களுக்கு இல்லை.
தொழிலாளர்களை பணிய வைக்கவும், குறைந்த கூலியில் அவர்களை வேலை செய்ய வைக்கவும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறக்கப்பட்டு தகரக் கொட்டகை அமைத்து அவர்களை அடைத்து வைத்துள்ளனர். சென்ற மாதம் சம்பளம் 14–ஆம் தேதி போடப்பட்ட போது தொழிலாளர்கள் ஆங்காங்கே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொழுது வெளிமாநில தொழிலாளர்களை காட்டி இவர்களை மிரட்டி உள்ளனர். மழை, வெள்ளம், தானே, பெஞ்சால் போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் தங்கள் உயிரை துச்சமென எண்ணி பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களை இப்படி வெளிமாநில தொழிலாளர்களை காட்டி மிரட்டுவதை அரசு வேடிக்கை பார்ப்பது ஏற்புடையதல்ல. இது கண்டிக்கத்தக்கதாகும்.
துப்புரவுத் தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்கள் என்பதால் வேலை வாங்கும் சூப்பர்வைசர்கள் அவர்களை ஒருமையில் தரக்குறைவாக திட்டுவதும், பாலியல் ரீதியாக பயன்படுத்த முயல்வதும் சில இடங்களில் அவர்களை தாக்குவதும் வாடிக்கையாகி உள்ளது. உதாரணத்திற்கு சென்ற 14–ஆம் தேதி இரவு கம்பன் கலையரங்கத்தில் கூடிய தொழிலாளர்களை சூப்ரவைசர் போடி, வாடி என்று ஒருமையில் திட்டியும், இழிவுபடுத்தி பேசியும், ஒரு தொழிலாளியை கண்ணத்தில் அறைந்தும், மற்றொரு தொழிலாளி மீது தண்ணீர் பாட்டில் வீசி அடித்ததும் நடந்தேறி உள்ளது. இவைகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய உள்ளாட்சித் துறை ஆட்சியாளர்களின் தயவு ஒப்பந்ததாரர்களுக்கு இருப்பதால் அந்த நிறுவனத்திற்கு சாதகமாகவே செயல்படுகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். பணியிடங்களில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனத்திற்கு மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆகவே, அரசையும், துப்பரவுப் பணியாளர்களையும் ஏமாற்றி பணம் பறிக்கின்ற கிரீன் வாரியர் நிறுவனத்தின் 19 ஆண்டுகால ஒப்பந்தத்தை இந்த அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதில் அரசு மெத்தனம் காட்டுமேயானால் பொதுமக்களையும், தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கிறோம்.