வாக்காளர் திருத்தப் பணியின்போது உஷாராக இருக்க வேண்டும்..திமுக–வினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை !

Loading

வாக்காளர் திருத்தப் பணியின்போது வடமாநிலத்தவர் வசிக்கும் பகுதியில் உஷாராக இருக்க வேண்டும் எனதிமுக–வினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி மாநில திமுக தொகுதி செயலாளர்கள் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. மாநில அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், பிரபாகரன், வேலவன், அமுதா குமார், நர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திமுக அமைப்பாளர் இரா. சிவா பேசியதாவது: – புதுச்சேரியில் பூத் லெவல் ஏஜென்ட் பட்டியலை தேர்தல் ஆணையத்தில் முதலில் கொடுத்தது திமுக தான். ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் இல்லம் தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கும் பணியை முடிக்கும் தருவாயில் இருக்கின்றனர். புதுச்சேரியில் நாம் விரைவில் தொடங்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஒவ்வொரு பூத்திற்கும் ஒரு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். பூத் அளவில் நியமிக்கப்படுபவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். கழகத் தலைவரின் செயலை பின்பற்றி இன்று அதிக அளவில் திமுக–வில் இளைஞர்கள் இணைந்துள்ளனர்.

ஒரு சில இளைஞர்கள் சினிமாக்காரர் பின்னால் செல்லலாம். ஆனால் நாடு, மொழி, குடும்பத்தை பற்றி சிந்திப்பவர்கள் திமுக–வில் தான் இருப்பார்கள். தமிழ்நாட்டில் திமுக எவ்வளவு வேகத்தில், வளர்ச்சியில் உள்ளதோ அதே வேகத்தில் புதுச்சேரியில் நாமும் செயல்பட வேண்டும். தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரியிலும் மலர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். உடல்நலம் சரியில்லாத போதும் மாநில வளர்ச்சிக்காகவும், எதிர்கால திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்த கழகத் தலைவர் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது முதலீடுகளை ஈர்க்க மீண்டும் வெளிநாடு செல்ல இருக்கிறார். ஆனால் புதுச்சேரியில் மாநில மக்கள், இளைஞர்கள் வளர்ச்சி பற்றி கவலைப்படாத அரசு உள்ளது. காவல் துறை முதல்வர், உள்துறை அமைச்சர் என இரு பிரிவாக செயல்படுகிறது. சமூக அமைப்புகள் என்ற பெயரில் காவல் அதிகாரிகளையே மிரட்டி பணம் பறிக்கும் கொடூரம் அரங்கேறி உள்ளது.

இதையெல்லாம் ஒழிக்க ஒருங்கிணைந்த புதுச்சேரி என்ற இலக்கை நோக்கி செல்ல வேண்டும். அதை நாம் தான் ஒருங்கிணைக்க வேண்டும். தேசிய அளவில் பாஜக வாக்காளர் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நமக்கு வாக்களிப்பவர்களை நீக்குகின்றனர். இப்படிப்பட்ட மிருகத்தனமான ஆட்சியில் நாம் உஷாராக இருக்க வேண்டும். ஆனால் திமுக–விடம் பாஜக–வின் ஏமாற்று வேலை பலிக்காது. வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வாக்காளர் திருத்த பணியின்போது பூத் ஏஜெண்டுகள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

தொகுதி செயலாளர்கள் சக்திவேல், திராவிடமணி, சீதாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், நடராஜன், சவுரிராஜன், சக்திவேல், தியாகராஜன், சிவக்குமார், ஆறுமுகம், மோகன். ரவிச்சந்திரன், ராஜாராமன், இளஞ்செழியபாண்டியன், ராதாகிருஷ்ணன், கலைவாணன், சத்தியவேல், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி மணிமாறன், இலக்கிய அணி மோகன்தாசு, மகளிர் அணி காயத்ரி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை சிவசங்கம், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மதிமாறன், விளையாட்டு மேம்பாட்டு அணி ரவிச்சந்திரன், மருத்துவர் அணி டாக்டர் ஆனந்த் ஆரோக்கியராஜ், அணித் தலைவர்கள் சண்முகசுந்தரம், கலைமாமணி எம்.எஸ். ராஜா, மதிவாணன், முகிலன், எம்.எஸ். முரளி, யோகேஷ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில அமைப்பாளர் தமிழரசன், துணை அமைப்பாளர்கள் சிவதாசன், பாலபாரதி, எழிலரசன், அனந்தராமன், அருண், சுப்ரமணியன், பிரவீன் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

0Shares