நீர்நிலைகளில் களிமண் விநாயகர் சிலைகள் மட்டுமே கரைக்க வேண்டும்..தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு!
விநாயகர் சதுர்த்தி விழாவில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி, களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளையே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்க மத்திய, மாசுகட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றுகூறியுள்ளார் .
மேலும் சிலைகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், தெர்மோகூல் பயன்படுத்தக்கூடாது. ஆபரணங்களுக்கு உலர்ந்த மலர், வைக்கோல் போன்ற இயற்கை பொருட்களையே பயன்படுத்த வேண்டும். பளபளப்புக்காக மரத்தின் இயற்கை பிசின்களைப் பயன்படுத்தலாம்.
வர்ணப்பூச்சு செய்வதில் நச்சு ரசாயனங்கள், எண்ணெய் பூச்சுகள், எனாமல், செயற்கை சாயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்; இயற்கை சாயங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
சிலைகள் முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூர், குலசேகரபட்டினம் ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும். விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் கொண்டாடுமாறு மக்களிடம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.