நகராட்சி அலுவலகம் முற்றுகையிடபடும்..அதிமுக உரிமை மீட்பு குழு எச்சரிக்கை!
புதுச்சேரி நகராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அதிமுக உரிமை மீட்பு குழு-மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் நகராட்சிக்குச் சொந்தமான உட்புற சாலைகள் பல மாதங்களுக்கு முன்னர் மின் துறை, பொதுப்பணித்துறை, குடிநீர் பிரிவு, மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ளன. ஆனால், அந்த சாலைகள் பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்தும் முறையாக மூடப்படாமலும், புதியதாக சாலை அமைக்கப்படாமலும் உள்ளமை பொதுமக்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சதுர அடி ஒன்றுக்கு ரூ.280 வீதம் வசூலிக்கப்பட்டும், அந்த பணிகளை மேற்கொண்ட துறையே சாலைகளை மீண்டும் புனரமைக்க வேண்டும் என நகராட்சி விதிமுறைகள் கூறுகின்றன. அல்லது அவர்கள் செலுத்தும் தொகையின் அடிப்படையில் நகராட்சியே சாலைகளை சரி செய்ய வேண்டும். ஆனால், நடைமுறையில் இது நடந்துவருவதில்லை.
முக்கியமாக, மழைக்காலத்தில் இந்த தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தினசரி மக்கள் பயன்படுத்தும் உட்புற சாலைகள் மோசமான நிலையில் காணப்படுகின்றன.
நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகத்சிங் வீதி, வ.உ.சி. தெரு, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசுத் திட்டங்கள் மற்றும் தனியார் நிறுவங்களின் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்று வரை சரிசெய்யப்படாமல் உள்ளன.
இவ்வாறு பொதுமக்கள் தினசரி தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை ஊடகங்களில் கூறியும், பத்திரிகைகளில் புகார்களும் வெளியான போதும்,சம்பந்தப்பட்ட துறையில் புகார் தெரிவித்தும் நகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது.
எனவே, உள்ளாட்சித் துறை உடனடியாக இதற்கான நடவடிக்கையை எடுத்து, ஒரு வார காலத்துக்குள் பள்ளங்கள் மூடப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையெனில், அதிமுக உரிமை மீட்பு குழுவின் சார்பில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம் என அதிமுக உரிமை மீட்பு குழு-மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.