தனிநபர் வருமானத்தை உயர்த்த முதல்வர் ரங்கசாமி தவறிவிட்டார்..அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு!

Loading

புதுச்சேரியில் தனிநபர் வருமானத்தை உயர்த்த முதல்வர் ரங்கசாமி தவறிவிட்டார் என தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில நிர்வாகிகள் ஆலேசானைக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில கழக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை வகித்தார். மாநில அவைத்தலைவர் சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தகவல் தொழில்நுட்ப அணி மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் தாமோ. தமிழரசன் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசியதாவது: – தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மக்களோடு மக்களாக நின்று மக்களுக்கான மகத்தான திட்டங்களை இந்திய திருநாடே வியக்கும் வண்ணம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து உறுதியாக இருந்து போராடி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் சிறப்பாக செயல்படுகிறார். அவர்கள் வழியில் புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக செயல்படுகிறது. வழிநெடுகிலும் பார்த்தேன். இன்னும் இரண்டு நாளில் பிறந்த நாள் விழா கொண்டாடும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் நல்ல மனிதர்.

இருந்தாலும் சிறிய மாநிலமான புதுச்சேரியை சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி தனிநபர் வருமானத்தை முதல்வர் உயர்த்தி இருக்கலாம். ஆனால் செய்ய அவர் தவறிவிட்டார். அதை திமுக தகவல் தொழில்நுட்ப அணி அவரது தோழர்களுக்கும், மக்களுக்கும் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி வார் ரூம் அமைத்து தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது. அதேபோல் புதுச்சேரியில் விரைவில் வார்ரூம் அமைத்து சிறப்பாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக ஆட்சி இருக்கும்போது தான் மக்களுக்கான மகத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. திமுக காரனால்தான் மக்களைப்பற்றி சிந்தித்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும். அதில் புதுச்சேரி மாநிலம் விதிவிளக்கல்ல. புதுச்சேரி மக்களுக்கு மீண்டும் விடியல் பிறக்காதா என்ற ஏக்கம் புதுச்சேரியில் உள்ள திமுக உடன்பிறப்புகளுக்கு உண்டு. அதற்கான ஆர்வமும், உற்காகமும் அவர்களிடத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆகவே, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் நிச்சயம் அமையும் அதற்கு தகவல் தொழில்நுட்ப அணியின் பங்கு அளப்பரியதாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 

0Shares