முதல்வர் ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி..பிஆர்டிசி ஊழியர்கள் தொடர்ந்து போராட முடிவு!

Loading

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முயற்சியில் முதல்வர் ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து பிஆர்டிசி ஊழியர்கள் தொடர்ந்து போராட முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகம் (பிஆர்டிசி) சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு மொத்தமாக 617 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 354 பேர் நிரந்தர ஊழியர்களாகவும், 263 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிகின்றனர். இதனிடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நிரந்தர ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் நேற்று முன்தினம் 28–ஆம் தேதி முதல்‌ 600 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் தொடர் வேலை போராட்டத்தை தொடங்கினர். இன்று‌ இரண்டாவது நாளாக பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்தி தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அழைத்ததின் அடிப்படையில் பிஆர்டிசி ஒருங்கிணைந்த போராட்ட குழு நிர்வாகிகள் வேலையன், ராஜேந்திரன், பாஸ்கரன், முத்துக் குமரப்பன், இளங்கோ, ஜெயசீலன், கார்த்திகேயன், தமிழ்ச்செல்வம், பிரதீஷ்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் சட்டசபையில் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. செந்தில்குமார், எல். சம்பத், சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ 10 ஆயிரம் ஊதிய‌ உயர்வு அளிக்கப்படும் எனவும், நிரந்தர ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி ஊழியர்களிடம் உறுதி அளித்தார். ஆனால் முதலமைச்சரின் உறுதிமொழியை ஏற்க மறுத்த ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யும் வரை வேலைநிறுத்த போராத்தை தொடர்வது‌ என முடிவு செய்துள்ளனர். இதனால் முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதுடன், அரசு சாலை போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கி பொதுமக்களை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

0Shares