எந்த நாடும் வசூலிக்காத அளவிற்கு வரி வசூல்..இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
இந்தியா நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவிற்கு அமெரிக்காவிடம் வரி வசூலித்துள்ளது என்று டிரம்ப் கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார். அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார். இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.
அதன்பின் வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்த அவர், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதை தொடர்ந்து இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு வருகிற 1-ந்தேதி அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் டிரம்ப் தனது ஸ்காட்லாந்து பயணத்தை முடித்து கொண்டு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முடிவு எட்டப்படவில்லை என்றால் 20 முதல் 25 சதவீதம் வரை இறக்குமதி வரியை இந்தியா எதிர்கொள்ளக்கூடும். இந்தியா நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவிற்கு அமெரிக்காவிடம் வரி வசூலித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத அனைத்து நாடுகளுக்கும் 15 அல்லது 20 சதவீதம் மட்டுமே வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வந்த நிலையில், கனடாவுக்கு 35 சதவீதமும், அல்ஜீரியா, இலங்கை மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு 30 சதவீத வரியும், புரூனே, லிபியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீதமும், பிலிப்பின்சுக்கு 20 சதவீதமும் டிரம்ப் அதிரடியாக வரி விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.