ஹைடிசைன் தொழிலாளர்கள் விவகாரம் ..முதல்வர் ரங்கசாமி புதிய உத்தரவு!
ஹைடிசைன் தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வில்லியனூர் ஒதியம்பட்டு ஹைடிசன் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் பேசி இறுதி முடிவு எடுப்பது என்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
புதுச்சேரி ஒதியம்பட்டில் இயங்கி வரும் ஹைடிசைன் தொழிற்சாலையில் பணிபுரியும் எல்பிஎப் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, வருடாந்திர பண்டிகை போனஸ், போக்குவரத்துப்படி, பஞ்சப்படி, கேண்டீன் அலவன்ஸ், சிஎல் விடுமுறை, விடுமுறை நாட்களில் வேலை பார்த்தால் கூடுதல் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒருவார காலமாக பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தொழிற்சாலை நிர்வாகத்திடம் வழங்கி, கோரிக்கைகள் அனைத்தும் ஒருவார காலத்திற்குள் தீர்க்க வேண்டும். அதுவரை தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணி செய்வார்கள். நிர்வாகம் தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியம் காட்டினால் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்த நேரிடும் என்றும் எச்சரித்தார். பின்னர் நிர்வாகம் தரப்பில் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால் ஒருவாரம் கடந்தும் நிர்வாகம் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தொழிலாளர்கள் மீண்டும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. செந்தில்குமார், எல். சம்பத், எல்பிஎப் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் அமுதா, லட்சுமி, கல்பனா, அமுதவல்லி ஆகியோரும், நிர்வாகம் தரப்பில் தொழிற்சாலை உரிமையாளர் திலீப்கப்பூர், தொழிற்சாலை பொது மேலாளர் சிவதாசன், மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஆனந்து ஆகியோரும் சட்டப் பேரவையில் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு, வருடாந்திர பண்டிகை போனஸ் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் இதில் நிர்வாகமும், தொழிலாளர்களும் பங்கேற்று சுமூக முடிவு எட்டுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.